ஆவூர் கோரைப்பாய், வேட்டவலம் ஜமீன், தளவாய் குளம் சந்தை மற்றும் நந்தன் கால்வாய் பாசன திட்டம் உள்ளிட்ட அடையாளங்களை கொண்டது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி. திருவண்ணாமலை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த கீழ்பெண்ணாத்தூர் 2011 சட்டமன்ற பேரவை தேர்தலின்போது புதிய தொகுதியாக அறிமுகமானது. இதுவரை இரண்டு தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
2016 இல் திமுக சார்பில் வெற்றி பெற்ற்ற கு. பிச்சாண்டி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் மொத்தம் 2,48,210 பேர் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பாய் உற்பத்தியே இங்குள்ள 109 ஊராட்சிகளில் பிரதானமான தொழிலாகும்.
பாய் உற்பத்தி பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு, இலவச மின்சாரம் வேண்டும் என்பது அந்தத் தொழிலை நம்பி இருப்பவர்களின் கோரிக்கை. நந்தன் கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு ஆகியவை விவசாயிகளின் கோரிக்கையாகும். அரசு கலை, அறிவியல் கல்லூரி வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை ஆகும்.
2016ம் ஆண்டு சட்டமன்ற பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கு. பிச்சாண்டி, தொகுதி நிதியில் நலத்திட்டங்களை பணிகள், கொரோனா காலத்தில் கட்சி சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் உதவிகள் செய்ததாக கூறுகிறார். தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் விரிவாக்கம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியின் வணிக நகரான வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது.