சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், பாலமுருகன் என்ற மகனும் இருந்தனர். பாலமுருகன் டிரைவராக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது சென்ற 3-ம் தேதி பாலமுருகனை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனால் மோசமாக காயமடைந்து விழுந்து கிடந்த பாலமுருகனை தள்ளுவண்டியில் அவரது தாய் கிராம மக்கள் உதவியுடன் வீட்டிற்கு கொண்டுவந்து நாட்டு வைத்தியம் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து திருச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தாய் அஞ்சலை கீரணிபட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் பாலமுருகனின் முகத்தை துணியால் மூடி தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உலகம்பட்டி காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.