நாடு முழுவதும் கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11 வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த பள்ளிக்கல்வித்துறை மே 3ஆம் தேதி பொதுத் தேர்வு நடத்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று கேள்வி எழும்பியுள்ளது. இந்த வருடம் காலாண்டு, அரையாண்டு போன்ற எந்த தேர்வும் நடத்தப்படாததால் எதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுவது, உயர் கல்விக்கு மாணவர்களைச் சேர்ப்பது என்ற குழம்பம் நிலவியது.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை மாவட்ட அளவிலான வினாத்தாளின் படி மூன்றாம் பருவம் தேர்வு மட்டும் நடத்தி மதிப்பெண் கணக்கிடுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த எட்டாம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பத்தாம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.