தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுத் தேர்வு நடக்க உள்ள 12ஆம் வகுப்பை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.