செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. அதனால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டு அருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்தன. அதன் காரணமாக செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்ய உள்ளதால் செல்போன் கோபுரங்களில் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் செல்போன் கோபுரங்களில் வெளியாகும் கதிர்வீச்சால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என விஞ்ஞானிகள் சிலர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த ஆராய்ச்சியில் செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களின் உடல் நலனிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கான விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
செல்போன்கள் குறைந்த அளவிலான ரேடியோ எதிர்ப்பு சக்தியை வெளியிடுகிறது. ஆனால் செல்போன் கோபுரம் வெளியிடும் ரேடியோ அதிர்வு சக்தி அதை விட குறைவானது. எனவே பொய் பிரசாரம் ஏற்படுத்தி அச்சத்தைப் போக்க பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.