தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டால் விடுமுறை அறிவிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மன்னார்குடியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த கொரோனா பாதிப்பு 16 பேருக்கு பரவியுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டால் மாவட்ட கல்வி அலுவலர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.