கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளியில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த முகாமில் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவுக்கு தினசரி வேலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் தோட்ட தொழிலாளர்களுக்கும் மருத்துவ மற்றும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த முகாமில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பயணிகள் இ-பாஸ் உள்ளதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு க.புதுப்பட்டி அரசு ஆரம்ப நிலைய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.