திண்டுக்கல்லில் செல்போனை திருடிச் சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சக்திவேல் விளையாடுவதற்காக அதே பகுதியில் உள்ள இறகுப்பந்து மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார்சைக்கிளை விளையாட்டு மைதானத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை முன்புற பையில் வைத்து விட்டு விளையாடச் சென்றுள்ளார். அதன்பின் விளையாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சக்திவேல் மோட்டார் சைக்கிள் அருகே சென்றார். அப்போது அங்கு செல்போன் காணாமல் போனதை கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சக்திவேல் அவரது தந்தையிடம் தகவல் தெரிவித்தார்.
அவரது தந்தை இந்த திருட்டு சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கம்பம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கம்பத்தைச் சேர்ந்த காசிராஜன், பண்ணைபுரத்தை சேர்ந்த நிதிஷ்குமார், கபிலன் என தெரியவந்தது மேலும் அவர்கள்தான் சக்திவேலின் செல்போனை திருடியது என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.