சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஆர்.சி. பள்ளி முன்பு தொடங்கியுள்ளது. அதன்பின் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக நேரு சிலை சிக்னல், பழைய பேருந்து நிலையம், என்.ஆர்.டி சாலை, பெரியகுளம் சாலை வழியாக நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அலுவலர்கள், மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை மாவட்ட ஆட்சியருமான சினேகா, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் அறிவுச்செல்வம், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி மாணவ-மாணவிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.