சிவகங்கை தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னாடியே திருவிழாவை நடத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் தனபால், பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார், மண்டகப்படிதாரர்கள், தாயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று முத்து மாரியம்மன் கோவில் விழா நிறைவுபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும், நோய்த்தொற்று பரவி வருவதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பொது மக்கள் ஒத்துழைப்புடன் விழா நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து 23-ஆம் தேதி காப்பு கட்டுதல், 30-ஆம் தேதி பொங்கல் வழிபாடும், 31-ஆம் தேதி தேரோட்டமும், 1-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 2-ஆம் தேதி தீர்த்தவாரி விழாவும் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.