Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம், தேனி, அல்லிநகரம் நகராட்சி உள்ளடக்கியதாகும். பெரியகுளமும், தேனியும் தனித்தனி தொகுதிகளாக இருந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் இரண்டும் ஒன்றாகி உள்ளன. மாவட்டத்தின் தலைநகரான தேனியும் பெரியகுளம் தொகுதியிலேயே  சேர்க்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தொகுதியில் இருந்து பிரிந்த பெரியகுளத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாறு 1967 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1முறையும் வென்றுள்ளன. கடைசியாக 2019 நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற சரவணகுமார் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். ஆண்  வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,74,990 வாக்காளர்கள் உள்ளனர்.

விவசாயத்தை நம்பியுள்ள பெரியகுளம் தொகுதியில் உள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு ஆகிய அணைகளை தூர் வார வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அதிகளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் மாம்பழ கூழ் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். கும்பகரை அருவியை  சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி பல்கலைக்கழகமாக மேம்படுத்தவேண்டும்.

தேனி, மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்ததுடன் தற்போது துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனினும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் எந்த தொழிற்சாலையும் ஏற்படுத்தப்படவில்லை என்பது தொகுதி மக்களின் குற்றச்சாட்டாகும்.

Categories

Tech |