மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சிறுவர்களுக்கு மது வழங்குவதாக அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கடையின் மேற்பார்வையாளர் எந்தவித பதிலும் சரியாக சொல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.