பெரம்பலூரில் ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-விராலிபட்டி சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600 கொண்டு செல்வது தெரியவந்தது. இது குறித்து மோட்டார் சைக்கிளில் வந்த செங்காட்டுபட்டியைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.