பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தீபா இரவு அவருடைய பெரியம்மா ராஜலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ இருக்கும் அறைக்கு சென்று உள்ளனர். அங்கு பார்த்தபோது பீரோ பூட்டப்படாமல் இருந்துள்ளது. அதனை மர்மநபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பீரோவில் இருந்த ரூபாய் 72 ஆயிரம் ரொக்கம் மற்றும் 43 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து காலையில் எழுந்த ராஜலட்சுமியும், தீபாவும் பீரோவில் இருந்த பொருட்கள் வெளியில் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் பீரோவில் இருந்த நகை பெட்டியை திறந்து பார்த்தபோது நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கை.களத்தூர் காவல் நிலையத்தில் இந்த திருட்டு குறித்து தீபா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்களை வைத்து சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இருக்கும் போதே மர்மநபர் இரவில் வீடு புகுந்து துணிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.