நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயரை வைத்தே நாகர்கோவில் என்று பெயர் வந்ததுள்ளது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த ஊர் நாகர்கோவில் ஆகும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை படித்த பள்ளி கோட்டாரில் உள்ளது. 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சந்தித்து வருகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்து சட்டமன்றத்திற்காக முதல் தேர்தலை சந்தித்த நாகர்கோவில் பின்னர் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், தேர்தலை சந்தித்தது.
1967க்குப் பிறகே தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் இணைந்துள்ளது. கடந்த தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,61,658 ஆகும். இந்த தொகுதியிலும் ஆண் வாக்காளர்களை விட பெண்களே அதிகம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்து கடந்த திமுக ஆட்சியின் போது 12 கோடி ரூபாயை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் ஒதுக்கீடு செய்தார். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அதன் பின் வந்த அதிமுக அரசு அந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை இதுவரையிலும் அமைக்கவில்லை. தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டமும் கிடப்பிலேயே இருக்கிறது.
நாகர்கோவிலில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், நிரந்தர குடிநீர் திட்டம், சாலை சீரமைப்பு, உரக்கிடங்கு மாற்றுதல், அடுக்கு வாகன நிறுத்துமிடம், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், ரயில் நிலையத்துடன் போக்குவரத்து தொடர்பை அதிகரிப்பது என கோரிக்கை குறித்து தொகுதி வாசிகள் அடுக்குகின்றனர். நாகர்கோவிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் வளர்ச்சிப்பணிகளுக்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என்ற புகாரும் இருக்கிறது. இந்த நிலை மாறுமா கோரிக்கைகள் நிறைவேறுமா என காத்திருக்கின்றனர் நாகர்கோவில் தொகுதி மக்கள்.