பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மல்லாபுரம் என நான்கு பேரூராட்சிகளையும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளிலும் உள்ளடக்கியுள்ளது. தென்கரைக்கோட்டை கிராமத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தரை மண் கோட்டை இருக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கரும், நெல், பாக்கு, தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
1977 ஆம் ஆண்டு முதல் மொரப்பூர் தொகுதியாக இருந்து வந்தது 2011இல் பாப்பிரெட்டிபட்டியாக உருவெடுத்தது.அதிலிருந்து 3முறையும் அதிமுக வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டியில் மொத்தம் 2,59,471 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண் வாக்காளர்களே அதிகம். பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது.
நெல், கரும்பு, பாக்கு, வாழை, தென்னை, மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாணியாறு அணையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் இல்லை.எனவே தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், பாக்கு விற்பனை மையம் அமைக்க வேண்டும், நாட்டு விதை பண்ணை தேவை என மக்கள் கோரிக்கைகளை பட்டியலிடுகின்றனர்.
பெண்களுக்கு தொழில் வளர்ச்சி திட்டம், வாணியாறு அணையை தூர் வாரி வலதுபுற இடதுபுற கால்வாய்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும், மரவள்ளிக்கிழங்கு ஆலையை அமைக்க வேண்டும், காய்கறிகளை பதப்படுத்தி விற்க குளிர்பதன கிடங்கு வசதி, மலர்களை ஏற்றுமதி செய்ய ரயில் சேவை, ஆனைமுடி நீர்த்தேக்கத் திட்டம், நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் நிரப்பும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கைகள் ஆகும்.
பாப்பிரெட்டிபட்டியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் பல கிராமங்களுக்கு சாலை வசதிகளே கிடையாது என்கிறார்கள் மக்கள். கிடப்பில் கிடக்கும் பொம்மிடி வேப்பாறு ஒரு அணை கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வரும் சட்டமன்றத் தொகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.