பெரம்பலூரில் பெற்றோர்கள் வைத்திருந்த மாத்திரையை சிறுவன் விளையாட்டுத்தனமாக தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதேயான நிவாஸ் என்ற மகன் இருந்தார். இவர் சென்ற புதன்கிழமை அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பெற்றோர்கள் வைத்திருந்த மாத்திரை, மருந்துகளை எடுத்து அந்த சிறுவன் தின்றுள்ளான்.
இதையடுத்து மயங்கி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.