பெரம்பலூர் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது காரில் வந்தவரிடமிருந்து ஆவணமில்லாத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சட்டநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ஆவணமில்லாத பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து குன்னம் சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.