3 முறை முதல்வராக தன்னலமின்றி ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
தொடர்ந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு ஷீலா தீட்சித், 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 2014 வரை கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பின் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் அன்பு மகள் ஷீலா தீட்சித் ஜி காலமானதைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், அவருடன் நான் நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பைப் பகிர்ந்து கொண்டேன். மிகுந்த வருத்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில் 3 முறை முதல்வராக தன்னலமின்றி பணியாற்றிய அவரது குடும்பத்தினருக்கும், டெல்லி குடிமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
I’m devastated to hear about the passing away of Sheila Dikshit Ji, a beloved daughter of the Congress Party, with whom I shared a close personal bond.
My condolences to her family & the citizens of Delhi, whom she served selflessly as a 3 term CM, in this time of great grief.
— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2019