Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிராமப்புறங்களிலும் மலைப் பகுதியையும் அதிகம் கொண்ட ஆண்டிப்பட்டி தொகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான வைகைநதி இங்குதான் உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. சுருளி அருவி, சின்னசுருளி அருவி, மேகமலை போன்ற சுற்றுலா தலங்களும், மிகப்பழமையான ஜம்புலிபுத்தூர் கத்திலி  நரசிங்க பெருமாள் கோவில், மாமுற்று வேலப்பர் கோவில் ஆகியவை ஆண்டிபட்டி தொகுதியின் அடையாளங்கள்.

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் சுதந்திரா கட்சியும் வென்றுள்ளன. அதன்பிறகு இந்த தொகுதியில் அதிமுக மட்டுமே 9 முறை வென்றுள்ளது. 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர்ரும், 2002 மற்றும் 2006 தேர்தல்களில் ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர். ஆண்டிபட்டியில் திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் மகாராஜன் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. பெண் வாக்காளர்கள் மிகுந்திருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2, 69,833 ஆகும். ஆண்டிப்பட்டி தொகுதியில் மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும். போக்குவரத்து சிக்கலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

விவசாயத்திற்கு அடுத்த படியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும்  ஆண்டிப்பட்டி தொகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள விசைத்தறி தொழில்நுட்ப பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மூல வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திப்பரைவு ஆணை திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என்பதும், ஆண்டிப்பட்டி விருதுநகரை இணைக்கும் கிலவன் கோவில் மலை சாலையை நிறைவேற்ற வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |