விருதுநகர் பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த காமராஜர் பிறந்த ஊர் என்பதும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இட கோரி 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் என்பதும் விருதுநகரின் தனி சிறப்புகள். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்4 முறையும், அதிமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா கட்சி, காங்கிரஸ், சரத் சின்ஹா காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, தேமுதிக கட்சிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மாணவர் தலைவர் பெ. சீனிவாசனிடம் காமராஜர் வெற்றிவாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். தற்போது விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் பொறுப்பில் இருக்கிறார். அதிக பெண் வாக்காளர்களை கொண்ட விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 2,24,327 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி படி ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம், அல்லம்பட்டி ரயில்வே கீழ்பாலம் ஆகியவற்றை திமுக எம்எல்ஏ நிறைவேற்றியுள்ளார். எனினும் அரசு கலைக்கல்லூரி வேண்டும், நான்கு வழிச்சாலையில் மக்கள் கடக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. அதே நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு மறுத்துவிட்டது என்கிறார் விருதுநகர் எம் எல் ஏ ஆர் ஆர் சீனிவாசன். கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்கும் தொகுதி மக்கள் மாவட்ட தலைநகரான விருதுநகரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் புறக்கணிக்கப்படும் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படும் திட்டங்கள் என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விருதுநகர் தொகுதி மக்கள் சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.