துணி பந்தல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து துணி பண்டலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. இதை திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதோடு நடராஜ் என்பவர் கிளீனராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரியின் வலதுபக்க முன்புற டயர் வெடித்து விட்டது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டீசல் டேங்க் சாலையில் உரசியபடி சென்றதால் அதிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ பற்றி விட்டது.
இதனால் டிரைவரும், கிளீனரும் உடனடியாக லாரியில் இருந்து கீழே இறங்கி தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் 60 லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள லாரி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.