தேனி மாவட்டம் போடிநாயகனுர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனுத்தாக்கள் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் போடி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் இன்றைக்கு அரசாணையின் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கிராம ஊராட்சிகளில் இருந்து பேரூராட்சிகள் வரை நகராட்சி வரை அனைத்து நிலைகளிலும் முழுமையாக மக்கள் மனம் நிறைவாக நிறைந்திருக்கிறது என்பதை தொகுதி மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்புக்கு உரிய கடமையை முழுமையாக நிறைவேற்ற்றுள்ளேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் போட்டியிடுகின்றேன். இரண்டு முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த பொதுமக்களுக்கு சேவை புரிவதே ஒரே குறிக்கோளாக கொண்டு மீண்டும் நான் போடி சட்டமன்ற தொகுதியில் களத்தில் நின்று கொண்டிருக்கின்றேன்.
மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதோடு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகாலமாக பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொடுத்து, நாட்டினுடைய பொருளாதாரத்தின் வளர்ச்சி அடைவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்தார்.