சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சிவகங்கையில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் சமூக சேவை சங்கம் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்கம் சிவகங்கையில் உள்ள பிரிட்டோ மஹாலில் நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தலைமை தாங்கியுள்ளார். சங்க செயலாளர் அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் இந்த கருத்தரங்கத்திற்கு முன்னிலை வகித்து உள்ளார். சமூக பொருளாதார அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் குறித்து பெண்ணிய எழுத்தாளர் மீனா சிறப்புரை ஆற்றினார்.
இதில் சங்க நிர்வாகிகள் ஜெயந்தி, மிக்கேலம்மாள், மேனகா ஆகியோர் பாலியல் பாதிப்புகள், மதுவின் பாதிப்புகள், அடிப்படை வசதியின்மை என்ற தலைப்பில் பேசியுள்ளனர். அருட்தந்தை ஆரோக்கிய பிரிட்டோ பிரபு, அமலன் ஆகியோர் பெண்களை வாழ்த்தி பேசினர். பூரண மதுவிலக்கு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, நிரந்தர நீர்ப்பாசன வசதி, உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஸ்பார் மற்றும் மாவட்ட மக்கள் அமைப்பு தலைவி கவிதா ஆகியோர் இதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.