மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி சக்தி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கணேசன், பத்மநாபன் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகரில் வசித்து வரும் சாய் சத்குரு ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் உரை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சாய் சத்குரு மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சாய் சத்குரு மின்கம்பத்தில் ஏறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கடந்த 1 ஆம் தேதி தான் சாய் சத்குரு மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.