மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2 கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது கால்களில் கொடூர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கிப் பிடித்தார். தொடர்ந்து நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து பிச்சுவா கத்தி, பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பின் இருவரையும் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் கமுதியில் மணிகண்டன் என்ற நபரை பழிக்குப்பழி வாங்க கூலிப்படையினர் உடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிய வந்து உள்ளது. இதனால் கொலையில் ஈடுபட்ட வழிவிட்டான்,பழனி குமார் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.