பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி வருவதால் அத்திவரதரை தரிசிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், சேலம் சாலை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
இதுவரை அத்திவரதரை தரிசிக்க முயற்சித்தபோது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பக்தர்கள் வசதிகளுக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து கோவில் நிர்வாகத்திடமும், அர்ச்சகர்களிடமும் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.