போலீஸ்காரர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பாளையம் கிழக்குத் தெருவில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்குழலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி ஏழாவது பாட்டாலியன் சிறப்பு காவல் படையில் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பதவி உயர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பின் போச்சம்பள்ளியில் உள்ள காவலர் குடியிருப்பு வந்து தங்கியுள்ளார்.
இதனையடுத்து தற்செயலாக கார்குழலி கண்விழித்து மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் ஹரிஹரசுதனை பார்க்க சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணிச்சுமை காரணமாக ஹரிஹரசுதன் தற்கொலை செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.