திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன், மோகன்ராஜ் என்பவருக்கும் அண்ணாமலை கோவில் திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன், மோகன்ராஜ் இருவரும் சங்கரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் முருகன் மற்றும் மோகன்ராஜ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.