2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ம்போது உருவான தொகுதி திருச்சுழி ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் மழையை மட்டுமே நம்பி உள்ள தொகுதி. புகழ்பெற்ற பூமிநாதர் கோவில் உள்ள திருச்சுழியில் தான் ரமணமகரிஷி பிறந்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் இணைந்திருந்த திருச்சுழி மறுசீரமைப்பின் போது புதிய தொகுதி ஆக உருவெடுத்தது. தொகுதி உருவான பிறகு நடைபெற்ற இரு தேர்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலேயே குறைவான வாக்காளர்களை கொண்ட திருச்சுழி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,20,720. வறண்ட பகுதியான திருச்சுழியின் முக்கியமான பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது. தமிழ்பாடி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே நீர் நிலைகளை சீரமைத்து விவசாயிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை.
நரிக்குடி அருகே அண்மையில் பெய்த மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான நெல், கடலை பயிர்கள் நோய் தாக்கம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன. பயிர் காப்பீட்டை பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது என்பதும் குற்றச்சாட்டு. போக்குவரத்து, மின்சார வசதிகள், மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியான திருச்சுழி மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவி கொடுப்பதில்லை என்ற புகார் உள்ளது. வரும் காலத்திலாவது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.