சிவகங்கையில் போலி ஆவணங்களைக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலத்தை விற்பனை செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்குளிப்பட்டி கிராமத்தில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வந்தார். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். இவருக்கு 2 ஏக்கர் 15 சென்டில் செங்குளிபட்டியில் பூர்வீக நிலம் உள்ளது. அந்த நிலம் அவரின் தந்தை சின்னையா மற்றும் பெரியப்பா காளிமுத்து ஆகியோரின் பெயரில் இருந்தது. அவர்கள் 2 பேரும் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இந்த நிலையில் நாட்டரசன் கோட்டை பகுதியை சேர்ந்த அழகர், ராஜேந்திரன், காரைக்குடியை சேர்ந்த முத்து கண்ணன், செங்குளிப்பட்டியை சேர்ந்த கதிரவன் ஆகிய 4 பேரும் சென்ற 7 வருடங்களுக்கு முன்பு போலி ஆவணங்களைக் கொண்டு நிலத்தை வேறு பெயருக்கு காளையார்கோவிலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் திருநாவுக்கரசர் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் மணிகண்டேஸ்வரன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.