திண்டுக்கல் வலையப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திகடன் செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மகா சிவராத்திரியான நேற்று மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள், ஆண்கள் உட்பட 25 பக்தர்கள் வரிசையாக கோவிலின் முன்பு அமர வைக்கப்பட்டனர். இந்த நேர்த்திக்கடனில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.