Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது அரூர். ஏராளமான மலை கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆலயம், தரைமட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சித்தேரி மலை உள்ளிட்ட இடங்கள் அரூர் சட்டமன்ற தொகுதி அடையாளங்கள். 1951ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதுவரை அதிமுக 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், திமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2019 இல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சம்பத்குமார் தற்போது எம்எல்ஏவாக உள்ளார், அரூர் தொகுதியில் மொத்தம் 2,42,455 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் அதிகம். அரூர் தொகுதி வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இப்பகுதி விவசாயிகள் கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, சோளம், கம்பு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கிறார்கள். இத்தொகுதியில் தொழிற்சாலைகள் கிடையாது. வேலை வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர் மக்கள். வேலை வாய்ப்பு இல்லாததால் பிழைப்பைத் தேடி இளைஞர்கள் கூலி வேலைக்கு கர்நாடகத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் செல்கின்றனர்.

அரூர் அருகே ஊத்து பள்ளம் என்ற கிராமத்தில் பூமிக்கு இடையில் மாலிப்டினம் என்ற ரசாயன அதிகமுள்ளது. விலை உயர்ந்த இந்த ரசாயனப் பொருளை வெட்டி எடுத்து ஆய்வுக்காக அனுப்பியதோடு சரி அதற்குப் பின் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் மக்கள். செங்கோட்டை என்ற இடத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு நிலங்கள் எடுக்கப்பட்டதோடு சரி ஆலை வரவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.

அரூர் தொகுதில் சிட்லிங் மற்றும் சித்தேரி மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதி இல்லை, குடிநீர் பிரச்சினை என பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் மக்கள் பட்டியலிடுகின்றனர். புகழ்பெற்ற தீர்த்தமலை சுற்றுலாத்தலமாக வேண்டும், வேளாண் தொழில் மையம் அமைக்க வேண்டும், வேளாண் கல்லூரி, மரவள்ளி கிழங்கு ஆலை, வரட்டாறு அணையின் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என தொகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏராளம்.

Categories

Tech |