மதுரை மாவட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் கக்கன் போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ள பகுதி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் ஆலயத்தை கொண்ட தொகுதி மேலூர். மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. மொத்தம் 5 முறை தொகுதியை கைபற்றி உள்ள அதிமுக கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் செல்வம் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,44,045 ஆகும். முல்லை பெரியாறு, வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதியான மேலூரில் விவசாயமே பிரதான தொழில். காவிரி, வைகை நதிகளை இணைப்பதன் மூலம் மட்டுமன்றி நத்தம், மானாமதுரை, திருப்பத்தூர் தொகுதி மக்களும் பயன் பெறுவர் என்பது இப்பகுதி மக்களின் கூற்று.
தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளதால் தேங்காய் சேமித்துவைக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மிக மோசமான நிலையில் இருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கான தொகுப்பு வீடுகளை புதுப்பித்து தர வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கின்றனர். கருங்காலக்குடி பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் நான்கு வழிச் சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அழகர்கோவில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து தரவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கருங்காலக்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் எதுவும் இல்லாத நிலையில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையே நீடிக்கிறது. எனவே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மேலூர் தொகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. கோரிக்கைகள் அதிகரிக்கும் அளவிற்கு தேர்தல் குறித்த மேலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.