கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 66 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் மாநகராட்சி அலுவலர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கின்றனரா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாநகராட்சி அலுவலர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலித்துள்ளனர். அவ்வாறு சென்னை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 3 கோடியே 66 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.