வழக்கறிஞர் வீட்டில் வேலைக்காரப் பெண் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோபாலபுரம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த போது அதில் 65 பவுன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வேலை பார்த்த நந்தினி என்ற பெண் மீது அவருக்கு சந்தேகம் எழுந்ததால் அவர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நந்தினி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் நந்தினியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நந்தினியின் உறவினரான கலியபெருமாள் என்பவர் தான் லோகேஷ் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடுவதற்கு தூண்டுதலாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நகைகளை சிறிது சிறிதாக எடுத்து அடகு கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றதை நந்தினி காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வரும் நந்தினியின் உறவினரான கலியபெருமாளையும் காவல்துறையினர் கைது செய்து திருடிய நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.