தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 250 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் வீதியில் உள்ள டீக்கடையில் இனி வெந்நீர் இலவசமாக கொடுக்கப்பட மாட்டாது அரை லிட்டர் வெந்நீர் 10 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாகவே வெந்நீரையும் விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடைக்காரர் கூறியுள்ளார்.