பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வேங்கூர் பூசை துறை பகுதியில் காளிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியமங்கலம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காளிதாசன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெல்டிங் பட்டறை தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து காளிதாசன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காளிதாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.