சிவகங்கை திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பாட்டி-பேத்தி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அவருடைய மருமகன் குருசாமி காரை ஓட்டியுள்ளார். கார் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே பறந்தது. இதனால் நிலைதடுமாறிய டிரைவர் பிரேக் பிடித்து பார்த்தார். ஆனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரினுள் இருந்த சண்முகசுந்தரத்தின் குடும்பத்தார் 9 பேரும் ஐயோ! அம்மா! என்று அலறினார்கள். மேலும் காரை திறக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால் திறக்க முடியவில்லை. இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் வந்து திறக்க முயன்றனர். அவர்களாலும் காரின் கதவைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரினுள் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சண்முகசுந்தரத்தின் குடும்பத்தார் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. சண்முகசுந்தரத்தின் மனைவி முத்துலட்சுமியும், அவரது மகளுடைய 2 வயது குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.