ஒற்றை காட்டு யானை நடுரோட்டில் அலைந்து கொண்டிருந்ததால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வனவிலங்குகள் இதை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த சாலையில் அரசு பேருந்து வந்து கொண்டிருக்கும்போது ஒற்றை யானை நடுரோட்டில் நின்றுள்ளது.
இதனைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் சற்று தூரத்திலேயே பேருந்தை நிறுத்தி விட்டு காத்துக் கொண்டிருந்தார். அந்த யானை சுமார் 30 நிமிடம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துள்ளது. அதன்பின் காட்டுக்குள் சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.