சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த M.B.A பட்டதாரி 30 வயதான முத்துபாண்டி என்ற சந்தோஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் சந்தோஷ், தனக்கு கல்யாணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினார். அதை நம்பிய பெண் டாக்டர் சந்தோசுடன் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சந்தோஷ் திருமணம் செய்து கொள்வதாகவும், தான் தொழில் தொடங்க போகிறேன் என்று கூறி, அதற்காக ரூ.30 லட்சம் மற்றும் 14 பவுன் நகையை பெண் டாக்டரிடம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பெண் டாக்டர் பரங்கிமலை மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், “தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தோஷ், ரூ.30 லட்சமும், 14 பவுன் நகைகளையும் ஏமாற்றி வாங்கி விட்டார். அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக” கூறியிருந்தார். இதுகுறித்து பரங்கிமலை மகளிர் போலீசார் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.