நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார்.
அதன்படி, ஜூன் 18 அன்று நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் இன்றளவு வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து எவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது தெரியாமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வருகிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
இதையடுத்து சபாநாயகர் நாளை காலை 11 மணிக்குள் தன்னை சந்திக்க வேண்டும் என ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்களுக்கும் சம்மன் அனுப்பினார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக மேற்கொண்டு விவாதம் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகையால், வருகின்ற புதன்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என சபாநாயகரை நேரில் சந்தித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கால அவகாசம் கேட்டுள்ளார்.