ரோந்து வாகனத்தையும், மீட்பு வாகனத்தையும் இணைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது ரோந்து வாகனம் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பழுதாகி விட்டது. அதன் பிறகு அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு மீட்பு வாகனத்தை வரவழைத்துள்ளார். இந்நிலையில் கருணாகரன் ரோந்து வாகனத்தையும், மீட்பு வாகனத்தையும் இணைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மீட்பு வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை எதிர்பாராதவிதமாக இயக்கியுள்ளார்.
இதனால் வாகனங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கருணாகரன் மீது மீட்பு வாகனம் ஏறியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி டவுன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.