வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் நிலவும் சீதோஷன சூழலை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை அன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சாரை சாரையாக வாகனங்களில் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடைபெறுகிறது. பைன் மரக்காடு, நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா,பில்லர் ராக், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் மேகங்கள் சூழ்ந்து குளுமையான சூழல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதனை அனுபவித்து மகிழ்ந்தனர்.