Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேராவூரணி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் என்ன ?

தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணி விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ள தொகுதியாகும். இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை இப்பகுதியின் சிறப்புமிக்க அடையாளமாக திகழ்கிறது. இங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் புகழ் பெற்றதாகும். பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள்2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக, தேமுதிக கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பேராவூரணியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய எம்எல்ஏவாக உள்ள அதிமுகவின் கோவிந்த ராசு உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,19,661. பேராவூரணி நகரில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளும், தேங்கும் சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை அடிக்கல் நாட்டப்பட்ட தோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொகுதியில் தென்னை விவசாயம் சார்ந்த தொழிற்சாலை ஏற்படுத்துவேன் என எம்எல்ஏ அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற புகாரும் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களை பேராவூரணியுடன் இணைக்கும் சாலைகளில் 3 தரை மட்ட பாலங்கள் மட்டுமே உள்ளன. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அறந்தாங்கியில் இருந்து பெருமகளூர் பேருந்து வசதி தேவை என்றும், கேஆர் புரத்தில் நூலகம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மல்லிபட்டினம் துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் படகுகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசு விளக்கமளித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது பேராவூரணி தொகுதி.

Categories

Tech |