மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் ஊரும் இதுதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்த ஊரும் பட்டுக்கோட்டை. இந்த தொகுதியில் நெல் மற்றும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள நாழியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும். பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 2முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன.
பட்டுக்கோட்டைத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் வி சேகர் உள்ளார். பட்டுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,45,258 ஆகும். பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் வாய்க்கால்களில் சாக்கடை தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயம் சார்ந்த தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியையும் அதிமுக எம்எல்ஏ நிறைவேற்றவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. மகாராஜ சமுத்திரம், நசுவினி, அக்னி ஆறு ஆகிய மூன்று நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இதுவரை வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி விரிவு படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டையில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் மக்களின் விருப்பம்.
தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் காந்திநகர் வாய்க்காலை தூர் வாரி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுக்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ வாக உள்ள உள்ள பட்டுக்கோட்டை தொகுதியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்களின் மிகப்பெரிய புகாராக உள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரும் தேர்தலில் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்