Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவையாறு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு தொகுதி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த தொகுதியாகும். சுற்றிலும் காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம், வெண்ணாறு, ஆகிய ஐந்து ஆறுகள் இருப்பதால் திருஐந்துஆறு திருவையாறு என பெயர்பெற்றது. வாழை, கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் இப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. திருவையாறு தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது.

தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ திமுகவின் துரை சந்திரசேகரன் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,62,616 ஆகும். இங்கு அதிக அளவில் விளைவிக்கப்படும் வாழைக்கு கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டுவந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பூதலூர், செங்கிப்பட்டி பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம். திருவையாறு நகர் பகுதியில் உள்ள சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். நீர் வளத்தால் செழிப்பான பகுதியாக திருவையாறு காணப்பட்டாலும் பொருளாதார ரீதியிலான வளர்ச்சி ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மக்களும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர்.

Categories

Tech |