திருவிடைமருதூர் கோவில்கள் நிறைந்த தொகுதியாகும். மகாலிங்கேஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளன. நவகிரக தலங்களான சூரியனார் கோவில், அக்னீஸ்வரர் ஆலயம் போன்றவையும் இங்கு உள்ளன. தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயமும், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலும் உள்ளன. பட்டுப் புடவைகளுக்கு புகழ்பெற்ற திருபுவனம் இங்குதான் உள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 1977 முதல் இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது.
அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக கோவி செழியன் உள்ளார். இந்த தொகுதியில் மொத்தம் 2,59,074 வாக்காளர்கள் உள்ளனர். ஆடுதுறையில் செயல்பட்டு வரும் நெல் ஆராய்ச்சி நிலையத்தை மையப்படுத்தி வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தொகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
குப்பை வரி வசூலிக்கப்படுவது குறித்தும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.கொரோனா தாக்கத்தால் பட்டு கைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள பட்டு கைத்தறி புடவைகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
எதிர்க் கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் ஆளும் கட்சியால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ள எம்எல்ஏ கோவி செழியன் திமுக ஆட்சி அமையும் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும் எந்த உதவிகளையும் அரசு செய்யவில்லை என குற்றச்சாட்டு மக்கள் தேர்தல் நாளை எதிர் நோக்கி உள்ளனர்.