மயிலாடுதுறை மாவட்டம் திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சம்ப்பள்ளி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நவக்கிரக யாகம், கலச பூஜை, கணபதி யாகம், லட்சுமி யாகம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சக்தி கரகத்துடன் பேச்சியம்மன், அங்காளம்மன், வீரபத்திர சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் இரண்டாவது நாளாக மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்து வழிபாடும் செய்தனர்.
மூன்றாவது நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் மேள,தாளத்துடன் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோவில் அருகே உள்ள மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடைபெற்றது. இதில் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் படையல் இடப்பட்டிருந்த தானியங்களை அள்ளி அனைவருக்கும் வழங்கினர். அதன்பின் புராண நாடகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.