Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்… ஒரு நண்பருக்காக உயிரைவிட்ட 4 நண்பர்கள்..!!

திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற நண்பர்களுள் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலெக்டரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருந்தார். கார்த்திக் பிரபாகரன் தனது தந்தை வைத்துள்ள கடையை கவனித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த செல்வ பிரபாகர், லோகநாதன், நாகராஜ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களும், சுதர்சன், பரத், சரவணன், சுரேஷ்குமார் ஆகிய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் கார்த்திக் பிரபாகரனின் நண்பர்கள். இவர்கள் 8 பேரும் திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு வார விடுமுறை தினமான நேற்று குளிப்பதற்காக 3 மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அதன்பின் ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு அணைப் பகுதிக்கு அருகே அமர்ந்து சாப்பிட்டனர். இதையடுத்து கார்த்திக் பிரபாகரன் சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பதற்காக அணையில் இறங்கியுள்ளார். ஆழமான பகுதிக்கு அவர் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். மேலும் தன்னை காப்பாற்றும்படி சத்தம் எழுப்பினார். அதனைக் கேட்ட செல்வ பிரபாகர், லோகநாதன், பரத், நாகராஜ் ஆகிய 4 பேரும் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அணையில் குதித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் பிரபாகரனை காப்பாற்ற முடியாத நிலையில் பரிதாபமாக ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். நண்பர்கள் தங்கள் கண்ணெதிரே மூழ்குவதை கண்ட மற்ற மூன்று நண்பர்களும் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய 5 பேரையும் மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 5 பேருமே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரின் உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஐந்து பேரின் உறவினர்களும் மருத்துவமனையின் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஒருவரை காப்பாற்ற முயற்சி செய்து 5 பேரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |